மேற்குவங்க திரிணாமுல் ஆட்சியை அகற்ற 3 மாதத்தில் 38 முறை மோடி, அமித் ஷா பிரசாரம் செய்தும் எடுபடவில்லை..! 76 தொகுதிகளை கைப்பற்றியும் வாக்கு சதவீதம் சரிந்தது

2021-05-03@ 21:46:42

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் ஆட்சியை அகற்ற பிப்ரவரி - ஏப்ரல் மாதங்களுக்கு இடையே மோடியும், அமித் ஷாவும் 38 முறை சென்று பிரசாரம் செய்தும் எடுபடவில்லை. மேலும், 76 தொகுதிகளை கைப்பற்றி இருந்தாலும் கூட 2019 மக்களவை தேர்தலுடன் ஒப்பிடும் போது பாஜகவுக்கு வாக்குசதவீதம் சரிந்துள்ளது. மேற்குவங்கம் உட்பட 5 மாநில தேர்தல் அட்டவணை பிப்ரவரி கடைசி வாரத்தில் அறிவிக்கப்பட்டது. ஆளும் திரிணாமுல் ஆட்சியை அகற்றவும், முதல்வர் மம்தாவுக்கு எதிராக பல்வேறு வியூகங்களை பாஜக வகுத்தது. திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்கள், நடிகர்கள் என பல்வேறு பிரபலங்களை தங்களது கட்சியில் வளைத்து போட்டது. அதுவும் எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டதால், மாநில அரசியலில் தேர்தல் ஜூரம் கிட்டத்தட்ட 3 மாதங்களாகவே நீடித்தது. இந்நிலையில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டதில் இன்று காலை நிலவரப்படி ஆளும் திரிணாமுல் 214 இடங்களையும், பாஜக 76 இடங்களையும் கைப்பற்றின.

தனிப்பெரும்பான்மை பலத்துடன் மம்தா மீண்டும் 3வது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டாலும் கூட, அவர் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் ேதாற்றுவிட்டார். அதனால், முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், அடுத்த 6 மாதத்திற்குள் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டிய கட்டாயம் மம்தாவுக்கு ஏற்பட்டுள்ளது. பாஜக மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தாலும், அக்கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 38.1 ஆக குறைந்தது. 2019 மக்களவைத் தேர்தலில் 40.6 சதவீத வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 47.9 ஆக அதிகரித்துள்ளது. இக்கட்சி 2019 தேர்தலில்  43.7% வாக்குகள் பெற்றது.  இந்நிலையில், பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மேற்குவங்கத்திற்கு 38 முறை சென்று தேர்தல் பிரசாரம் செய்தனர். அதில், மோடி 17 முறையும், அமித் ஷா 21 முறையும் சென்று தீவிர பிரசாரம் செய்தனர். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தேர்தல் பிரசார கூட்டங்களில் உரையாற்றினர்.

அம்மாநிலத்தில் பிறந்த பாஜகவை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான சியாமா பிரசாத் முகர்ஜி அடையாளம், பாஜகவின் தேர்தல் பிரசாரத்தில் எடுபடவில்லை. மேலும், மோடி உள்ளிட்ட தலைவர்கள் மேற்குவங்காளத்தில் பாஜக 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்று வாக்காளர்கள் மத்தியில் பிரசாரம் செய்ததும் எடுபடவில்லை. முதல்வர் மம்தா பானர்ஜி, தனது தேர்தல் பிரசாரத்தில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் வங்காளத்தை பிளவுபடுத்துகிறார்கள் என்ற பிரசாரமும், மக்கள் மத்தியில் பாஜகவுக்கு எதிராக திரும்பியது. மேலும், உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற பிரசாரத்தில், மேற்குவங்கத்தில் ரோமியோ எதிர்ப்பு குழுக்களை அமைப்பதாக வாக்குறுதி அளித்தது, அம்மாநில மக்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல், திரிணாமுல் கட்சியில் இருந்து விலகிய பெரும்பாலான ‘கறைபடிந்த’ தலைவர்களை பாஜகவில் சேர்த்தது தவறு என்றும், இதனால் பிரசாரத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டதாக அம்மாநில பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.

தேசிய தலைவரான மம்தா

மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி 17 பேரணியும், உள்துறை  அமைச்சர் அமித் ஷா 21 நாட்களில் 62 பேரணியும் நடத்தினர். மத்திய  அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், மத்திய பாஜக  தலைவர்கள் உள்ளிட்டோர் 117 நாட்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இவ்வாறாக மோடி, அமித் ஷா தலைமையிலான பாஜகவின் வலிமையான பிரசாரத்தை முறியடித்து, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, 3வது முறையாக மேற்குவங்கத்தில் ஆட்சியை கைப்பற்றி உள்ளார். இவரது வெற்றியின் மூலம் பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளில் திரிணாமுல் தேசிய அரசியலில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. மம்தாவின் வெற்றியானது, அடுத்த மக்களவைத் தேர்தலுக்கான அடித்தளமாக பார்க்கப்படுகிறது. பாஜகவை எதிர்க்கும் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் கூட்டணி, மேற்குவங்கத்தில் தோல்வியுற்றதும் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படுகிறது.