சென்னை: மம்தா பானர்ஜி மற்றும் பினராயி விஜயனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது: மேற்கு வங்க முதல்வராக மீண்டும் வெற்றிபெற்றுள்ள மம்தா பானர்ஜிக்கு எனது வாழ்த்துக்கள். கோவிட்-19 பெருந்தொற்று அலை ஏற்பட்டுள்ள இந்நேரத்தில், மம்தா அவர்கள் தன் மாநில மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, மாநிலத்தை வளர்ச்சியை நோக்கி இட்டுச்செல்வார் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை. மற்றுமொரு வெற்றிகரமான ஆட்சிக்காலத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகிறேன். இதேபோல், கேரள மாநில சட்டமன்ற தேர்தலில் தனது கட்சிக்கு வெற்றியை தேடி தந்த தோழர் பினராயி விஜயனுக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக எனது வாழ்த்துக்கள். கேரளா பெரும் உயரங்களை அடைய அவரது திட்டமிட்ட, உறுதியான தலைமை பெரிதும் உதவி வருகிறது. மற்றுமொரு வெற்றிகரமான ஆட்சிக்காலத்துக்கு அவரை வாழ்த்துகிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.