சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி: வாழ்த்து மழையில் நனையும் மு.க.ஸ்டாலின்

2021-05-03@ 21:19:55

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணி முதல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே திமுக கூட்டணி வலுவான முன்னிலையில் இருந்தது. இறுதியாக 159 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனி மெஜாரிட்டி பெற்று சாதனை படைத்துள்ளது. இதனால் தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். அவர் நேற்று மதியம் முதல் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் மற்றும் பல அமைச்சர்கள், எம்பிக்கள் தங்களது சமூக வலைதளங்களிலும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். நேரில் சென்றும் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், டிஜிபி திரிபாதி ஆகியோர் சந்தித்து பூச்செண்டு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்னணி திரைப்பட நடிகரான ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல்ஹாசனும் வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வாழ்த்து தெரிவித்தார். மேலும் திரைப்பட துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர்கள் என அனைத்து தரப்பினரும் தொலைபேசியிலும், தங்களது சமூக வலைதள பக்கங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தொழில் அதிபர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.