ஜெயக்குமார், சண்முகம் உள்பட 10 அமைச்சர்கள் தோல்வி

2021-05-03@ 00:01:52

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்பட 10 முக்கிய அமைச்சர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் 173 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில், 24 அமைச்சர்களுக்கு எதிராக தி.மு.க. வேட்பாளர்கள் நேரடியாக மோதினர். நேற்றைய தேர்தல் முடிவில், எடப்பாடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சம்பத்குமாரை விட முதல்வர் பழனிசாமி 81,382 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தங்கதமிழ்ச்செல்வனை 3 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதேபோல், மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட 13 பேர் வென்றனர்.

ஆனால், முக்கிய அமைச்சர்கள் 10 பேர் தோல்வியை தழுவியுள்ளனர். ராயபுரம் தொகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை ஐட்ரீம் ரா.மூர்த்தி தோற்கடித்தார். இதுதவிர, மதுரவாயல் தொகுதியில் காரப்பாக்கம் கணபதியிடம் பென்ஜமினும், ஆவடி தொகுதியில் மு.நாசரிடம் மாபா பாண்டியராஜனும் வீழ்ந்தனர். ஜோலார்பேட்டை தொகுதியில் கே.சி.வீரமணியை திமுக மாவட்டச் செயலாளர் தேவராஜ் வென்றார். விழுப்புரம் தொகுதியில் அதிமுகவில் இருந்து வந்த டாக்டர் லட்சுமணனிடம் சி.வி.சண்முகம் தோல்வியடைந்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் மதிவேந்தனிடம் சரோஜா, திருச்சி கிழக்கு தொகுதியில் இனிகோ இருதயராஜிடம் வெல்லமண்டி நடராஜன், ராஜபாளையம் தொகுதியில் தங்கபாண்டியனிடம் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடலூர் தொகுதியில் அய்யப்பனிடம் எம்.சி.சம்பத், சங்கரன்கோவில் தொகுதியில் ஈ.ராஜாவிடம் வி.எம்.ராஜலட்சுமி ஆகிய 10 பேரும் தோல்வி அடைந்தனர். இதுதவிர, முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி (ஆலந்தூர்), பி.வி.ரமணா (திருவள்ளூர்), டி.கே.எம்.சின்னையா (தாம்பரம்), கோகுலஇந்திரா (அண்ணாநகர்), கு.ப.கிருஷ்ணன்(ரங்கம்) ஆகியோர் தோல்வியை தழுவினர்.

* எடப்பாடி இன்று ராஜினாமா
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார். அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்துள்ளது. தற்போது முதல்வராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். அதிமுக தோல்வி அடைந்ததையொட்டி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை இன்று ராஜினாமா செய்கிறது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, எடப்பாடி பழனிசாமி ராஜினாமா கடிதத்தை வழங்குவார்.