திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 தொகுதிகளில் திமுக அமோக வெற்றி-அதிமுக 2 தொகுதிகளில் வென்றது

2021-05-03@ 13:44:15

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 தொகுதிகளில் திமுக அமோக வெற்றி வெற்றது. அதிமுக 2 தொகுதிகளில் வென்றது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6ம் தேதி நடந்தது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தமுள்ள 20,77,440 வாக்காளர்களில், 16,41,169 பேர் வாக்களித்து இருந்தனர். இது 79 சதவீத வாக்குப் பதிவாகும். திமுக, அதிமுக உட்பட மொத்தம் 122 வேட்பாளர்கள் களமிறங்கினர்.

இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்து 27 நாட்களுக்கு பிறகு, நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதன்படி, திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டி வாக்கு எண்ணும் மையத்தில் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம் ஆகிய தொகுதிகளுக்கும், ஆரணி தச்சூர் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆரணி, போளூர், செய்யாறு, வந்தவாசி ஆகிய தொகுதிகளுக்கும் வாக்குகள் எண்ணப்பட்டது.அதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பாதுகாப்பு அறையில் இருந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டுவர தனித்தனியே தடுப்புகள் அமைத்து பாதை ஏற்படுத்தி இருந்தனர்.

ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேசைகள் போடப்பட்டு இருந்தன. ஒரு சுற்றுக்கு 14 மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. ஒரு மேசைக்கு ஒரு நுண்பார்வையாளர் உட்பட 3 பேர் வாக்கு எண்ணும் பணியில் பணியில் ஈடுபட்டனர்.

தடுப்பு வேலிகளுக்கு வெளியே, சமூக இடைவெளியுடன் அமர்ந்து வாக்கு எண்ணிக்கையை பார்வையிட முகவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும், ஒவ்வொரு மேசைக்கும் தனித்தனியே சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதையொட்டி, காலை 6 மணிக்கு முன்பு வாக்கு எண்ணும் அலுவலர்களும், 7 மணிக்கு முன்பு முகவர்களும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், உரிய அடையாள அட்டை மற்றும் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பதற்கான சான்று அல்லது இரண்டு முறை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று ஆகியவற்றை பரிசோதித்தும், வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவு வாயிலில், மெட்டல் டிடெக்டர் சோதனை, உடல் வெப்ப பரிசோதனை செய்தும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக தபால் வாக்குகளும் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டது.

இந்நிலையில்திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எ.வ.வேலு 94,266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மாநில அளவில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களில் 2ம் இடம் பெற்றுள்ளார். திருவண்ணாமலை ெதாகுதியில் எ.வ.வேலு 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே தண்டராம்பட்டு தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட எ.வ.வேலு தற்போது திருவண்ணாமலை தொகுதியில் 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோல், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கு.பிச்சாண்டி 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே, திருவண்ணாமலை தொகுதியில் 4 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.செங்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் மு.பெ.கிரி தொடர்ந்து 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். கலசபாக்கம் தொகுதியில் புதுமுகமாக களம் இறங்கிய திமுக வேட்பாளர் பெ.சு.தி.சரவணன் வெற்றி பெற்றுள்ளார். வந்தவாசி தொகுதியில் எஸ்.அம்பேத்குமார் 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

செய்யாறு தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஒ.ஜோதி வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் திமுக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும், ஆரணி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். போளூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றுள்ளார். இவர் கலசபாக்கம் தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.