முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின-போலீசார் தீவிர கண்காணிப்பு

2021-05-03@ 13:35:01

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் நேற்று முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடர்ந்திருந்த கொரோனா  ஊரடங்கால் அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டனர். பின்னர், செப்டம்பர் மாதம் துவக்கத்திலிருந்து  ஊரடங்கு  தளர்வால் பெரும்பாலான அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்கள் வணிக வளாகங்கள் திறக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, படிப்படியாக தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதம் துவக்கத்திலிருந்து பரவிய கொரோனா இரண்டாம் அலையால் ஒரு வாரமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமானது.பல மாதத்திற்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பெருமளவு தளர்வு ஏற்படுத்தப்பட்டாலும், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிப்பால் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதில், கடந்த மாதம் 25ம் தேதி முதன்முறையாக எந்தவித தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது.
நேற்று இரண்டாம் முறையாக தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால், சுமார் 30 மணி நேரம் வரை வாகன போக்குவரத்தும் இல்லாமல், நெடுஞ்சாலைகள் அனைத்தும் வெறிச்சோடின.

மருந்து கடைகள்  மற்றும் பால் பண்ணைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தது. இருப்பினும், முழு ஊரடங்கு உத்தரவையும் மீறிவோர் குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  இதில், நகரிலிருந்து பிரிந்து செல்லும் முக்கிய ரோடு சந்திப்புகளில் ஆங்காங்கே டிவைடர்கள் அமைத்து போலீசார் கண்காணித்தனர்.

அவர்கள், அந்த வழியாக விதிமீறி வந்து செல்வோர் குறித்து விசாரித்து அனுப்பினர். இதில், கோவை ரோடு, பஸ் நிலைய பகுதி, உடுமலை ரோடு தேர்நிலை சந்திப்பு, மார்க்கெட் ரோடு, கோட்டூர் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் நின்ற போலீசார், தடையை மீறி அந்த வழியாக பைக் மற்றும் கார்களில் வந்தவர்களை விசாரித்து அனுப்பினர்.

இருப்பினும், சிலரை எச்சரித்து அனுப்பினர். மேலும், நேற்று முழு ஊரடங்கால், எப்போதும் பரபரப்பாக இருக்கும் மத்திய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் வெறிச்சோடின. இருப்பினும், பஸ் நிலைய பகுதிகளில் அடிக்கடி போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு கண்காணித்தனர்.
அதுபோல், ஆனைமலை மற்றும் கோட்டூர் பகுதிகளில், முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது.