புதுடெல்லி : கொரோனா காலத்தில் தேர்தலை நடத்தியதற்காக கொலைக் குற்றம் கூட சுமத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜனநாயக தூண்களாக இருக்கும் உயர்நீதிமன்றங்களை எப்படி தொந்தரவு செய்ய முடியும் என சரமாரி கேள்வியெழுப்பியுள்ளது.
தமிழகத்தில் கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளரான விஜயபாஸ்கர் தனது தொகுதியில் உரிய கோரோனா விதிமுறைகளை அமல்படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி அமர்வு பிறப்பித்த உத்தரவில்,'தேர்தல் நேரத்தில் கடுமையான கொரோனா விதிமுறை மீறல்கள் ஏற்பட்டபோதும் அதனை தடுக்க தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இவ்வளவு அதிகமாக கட்டுக்கடங்காமல் இருப்பதற்கு தேர்தல் ஆணையத்தின் மெத்தனப் போக்கு தான் முக்கிய காரணைமாக அமைந்துள்ளது. இதற்காக கொலைக் குற்றம் கூட அவர்கள் மீது சுமத்தலாம் என காட்டமாக உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவிற்கு எதிராக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 1ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,' உயர்நீதிமன்றத்தின் இந்த கருத்து என்பது தேர்தல் ஆணையத்திற்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் பரவலாக தேர்தல் ஆணையத்தின் மீதான கடுமையான விமர்சனங்கள் எழுந்ததற்கும் காரணமாக அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏ.எம்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் தரப்பு வாதத்தில்,' உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு என்பது எங்களை வேதனை அடைய செய்தது மட்டுமில்லாம், மிகவும் புன்படுத்தியுள்ளது. இதில் தேர்தலை நடத்தியது என்பது கொலைக் குற்றம் செய்தமைக்கு சமம் என்பதை கண்டிப்பாக ஏற்க முடியாது. ஏனெனில் அனைத்தும் சரியான முறையிலும், கொரோனா பாதுகாப்பை நடைமுறை பின்பற்றப்பட்டும் தான் நடத்தப்பட்டது. எந்தஒரு விளக்கம் மற்றும் கருத்தை கேட்காமல் எங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால் உயர்நீதிமன்றங்கள் எங்கள் மீது சாடுவதை நீதிமன்றம் கருத்தில் கொண்டு ஒரு பொதுவான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில்,'நமது நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு ஜனநாயகம் இருக்கிறது என்பதை முக்கியமாக கருதப்படுகிறது. மேலும் உயர்நீதிமன்றங்கள் என்பது ஜனநாயகத்தின் தூண்களாக இருப்பதால் அவர்களை தொந்தரவு செய்ய முடியாது. அதற்கு நாங்களும் விரும்பவில்லை. அது எப்படி சாத்தியமாகும். தேர்தல் ஆணையம் என்பது தனி அதிகாரம் கொண்டது. அப்படி இருக்கும்போது கொரோனா காலத்தில் தேர்தலை நடத்தியது ஏன்?, அதற்கான அவசர அவசியம் என்பது ஒன்றும் கட்டாயமாக இல்லையே?, இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவிக்கவில்லை.
அதனை ஆணையம் தான் சரியானக் கோணத்தில் புரிந்து கொண்டு, தனக்கான தவறை சரிசெய்துக் கொள்ள முன்வர வேண்டும். அதற்காக தான் உயர்நீதிமன்றங்கள் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்கின்றன. அதனால் இந்த விவகாரத்தில் ஒரு உத்தரவை பிறப்பிக்க நாங்கள் இந்த வார இறுதிக்குள் முயற்சிக்கிறோம். மேலும் நாங்கள் பிறப்பிக்கும் உத்தரவு என்பது தெளிவாகவும், அனைத்தையும் பலப்படுத்தும் விதமாகவும் இருக்கும் என தெரிவித்த நீதிபதிகள் உத்தரவை தேதி குறிப்பிடாமல் நேற்று ஒத்திவைத்தனர்.