பொதுமக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்வதே முதல் இலக்கு!: வெற்றிப்பெற்ற திமுக வேட்பாளர்கள் உறுதி..!!
2021-05-03@ 11:05:29
சென்னை: பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வரும் காலங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்கள் உறுதி அளித்துள்ளனர். திருக்கோவிலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியும், திருவண்ணாமலை தொகுதியில் எ.வ. வேலுவும், பாபநாசம் தொகுதியில் ஜவாஹிருல்லாவும் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோன்று திருச்செங்கோடு தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரனும், விளவன்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணியும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, பொதுமக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்துள்ளார். ஸ்டாலினின் வியக்கத்தக்க அர்பணிப்பிற்கு கிடைத்த வெற்றி என்று ஜவாஹிருல்லா குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குவதே முதல் இலக்கு என்று ஈஸ்வரன் தெரிவித்தார்.
இதனை போலவே, தமிழக மக்களின் பிரச்சனைக்காக குரல் கொடுப்போம் என்று விஜயதாரணி குறிப்பிட்டுள்ளார். தேர்தல் அறிக்கையின்படி வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனறு எ.வ. வேலு தெரிவித்தார். இதையடுத்து, காங்கேயம் தொகுதியில் திமுக வேட்பாளர் சாமிநாதமும், நாகர்கோவில் தொகுதியில் பாஜக வேட்பாளர் காந்தியும் வெற்றி பெற்றுள்ளனர்.