கோவில்பட்டி: கோவில்பட்டி ரயில்வே குடியிருப்பில் குடிநீர் பைப்லைன் நகராட்சி அதிகாரிகளால் சீரமைக்கப்பட்டது. கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே ரயில்வே குடியிருப்பு உள்ளது. இங்கு எலக்ட்ரிக்கல் பொறியாளர்கள், தண்டவாள பராமரிப்பு பணியாளர்கள் என 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரயில் நிலையம் அருகே தரைநிலை தொட்டியில் சீவலப்பேரி குடிநீர் குழாய் மூலம் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து மோட்டார் மூலம் நீர்த்தேக்க தொட்டிக்கு பம்பிங் செய்யப்படுகிறது.
அதன்பிறகு நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ரயில்வே குடியிருப்பு மற்றும் ரயில்நிலையத்திற்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சீலப்பேரி குடிநீர் சாக்கடை கலந்து வந்ததோடு, தரைமட்ட தொட்டியில் நேரடியாக விழுந்ததால் கடுமையான துர்நாற்றம் வீசியதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன் தினகரன் நாளிதழில் படத்துடன் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு குடிநீர் பைப்லைனை சரி செய்தனர்.