தேமுதிகவுக்கு கடும் வீழ்ச்சி : 2011ல் எதிர்கட்சி; 2021ல்.....?

2021-05-03@ 16:41:19

சென்னை: அமமுக கூட்டணியில் போட்டியிட்ட 60 தொகுதிகளிலும் தேமுதிக நோட்டா உடன் போட்டி போட்டது கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வாக்கு சதவீதம் குறைந்ததால் முரசு சின்னத்தை இழக்கும் அபாயத்தில் தேமுதிக உள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே, அதிமுக கூட்டணியில் இடம்பெறக் கணக்குப் போட்டு தேமுதிக காய்களை நகர்த்தியது. ஆனால் அதிமுக, பாமகவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் தேமுதிக கடும் அதிருப்தி அடைந்ததோடு மட்டுமல்லாமல் குறைந்தபட்சம் 23 தொகுதிகளையாவது தர வேண்டும் என்று கேட்டது.
 à®†à®©à®¾à®²à¯, அதிமுக தரப்பில் இதை ஒப்புக் கொள்ளவில்லை.

இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியது. அதன் பின்னர் திமுகவும், அதிமுகவும் தேமுதிகவை கண்டு கொள்ளாததால் இறுதியில் அமமுக, கூட்டணி கதவை  திறந்துவைத்து, அவர்களை அழைத்து கொண்டது. இந்த கூட்டணியில்  60 இடங்களில் களமிறங்கிய தேமுதிக. உடல்நிலை காரணமாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை. அதேநேரம் அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார். சுமார் ஒரு மாதம் விருதாச்சாலம் தொகுதியிலேயே முகாமிட்டிருந்த பிரேமலதா, சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தேர்தலில் வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையிலேயே அவர் இருந்தார். தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியதில் இருந்தே தேமுதிகவினருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. அக்கட்சி போட்டியிட்ட எந்தவொரு தொகுதியிலும் சிறு கட்சிகளை விட தேமுதிக பின்னுக்கு தள்ளப்பட்டது. விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார். சீமான் கட்சியுடன் போட்டி போட்டு கொண்டும், முட்டி மோதிக் கொண்டும் இருந்ததை பார்க்கும்போது வேதனையாக இருந்தது என்கிறார்கள் தேமுதிகவினர்.  

10 ஆண்டுகளுக்கு முன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்ற அந்தத் தொகுதியில் பிரேமலதாவால் சுமார் 25 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தேர்தலில் டெபாசிட்டையும் இழந்தது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த்  உடல்நலம் குன்றியதில் இருந்தே, விஜயகாந்த்துடன் சேர்ந்து அந்த கட்சியும் வலுவிழந்து போய்விட்டது என்கிறார்கள் தேமுதிகவினர். பிரேமலதாவும், சுதீஷும் மொத்தமாகவே கட்சியை டேக் ஓவர் செய்து கொண்டதாக குற்றம்சாட்டுகின்றனர். மக்களுடன் ஒன்றிணையாதது, மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காதது. ஏடாகூட பேச்சு, வம்பிழுக்கும் பேட்டிகள், நிர்வாகிகளிடம் அதிருப்தி உள்ளிட்டவைகள் தான் தேமுதிகவின் இந்த நிலமைக்கு காரணம் என்கின்றனர்.  

 à®µà®¿à®œà®¯à®•ாந்த்தை வைத்து பிரச்சாரங்களை நடத்தினார். அவரால் பேச முடியவில்லை. வெறும் விரல் சைகையினால் வாக்கு சேகரித்தார். விஜயகாந்த்தை வேனில் ஏற்றி ஊர்வலம் கொண்டு வந்ததை பார்த்து, அனுதாபம் தான் வந்ததே தவிர, அவை அனுதாப ஓட்டுக்களாக மாறவே இல்லை. மாறாக, இந்த அளவுக்கு உடம்பு சரியில்லாதவரை இப்படி, பிரச்சாரத்துக்கு அழைத்து வர வேண்டுமா என்று கோபம் தான் மக்களிடம் எழுந்தது. 2006 தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் விருத்தாசலத்தில் போட்டியிட்டு, சுமார் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்றார். ஆனால், நேற்றைய வாக்கு எண்ணிக்கையில் மநீம, நாம் தமிழர் கட்சிகளை விடவும் பின்தங்கி ஆரம்பம் முதலே நோட்டா உடன் தான் தேமுதிக போட்டி ஏற்பட்டது தேமுதிகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தேமுதிகவின் அடித்தளமே ஆட்டம் கண்டுள்ளது. 2016ல் தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் 2.39-ஆகவும், 2019 எம்பி தேர்தலில் 2.19 சதவீதமாகவும் குறைந்து, இன்று அக்கட்சி தன்னுடைய முரசு சின்னத்தையும் இழக்கக் கூடிய அபாயத்தில் உள்ளது. தமிழகத்தில் போட்டியிட்ட 60 தொகுதிகளிலும் நோட்டாவைவிட குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளது. தமிழகத்தில் நோட்டாவின் வாக்கு சதவீதம் 0.77 ஆகும். அது போல் தேமுதிக அதைவிட குறைவாக 0.45 சதவீதம் பெற்றுள்ளது. இனி தேமுதிகவின் எதிர்காலம் எந்த மாதிரி இருக்கும் என விஜயகாந்தின் நலம் விரும்பிகள் கவலையில் உள்ளனர்.

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்களில் பொதுவாக பாஜகதான் நோட்டாவுடன் போட்டி போடும். ஆனால் இப்போது தேமுதிக அந்த இடத்துக்கு வந்திருப்பது தேமுதிகவினர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.