கர்நாடகாவில் அதிர்ச்சி!: ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரே நாளில் 24 நோயாளிகள் பலி.. உறவினர்கள் கதறல்..!!

2021-05-03@ 14:07:49

பெங்களூரு: கர்நாடகாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனை ஒன்றில் ஒரேநாளில் 24 நோயாளிகள் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ம் அலை அதிதீவிரமடைந்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் கொரோனாக்கு பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மேலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பெருமளவு மக்கள் உயிரிழக்கின்றனர். இதையடுத்து ரயில்கள் மூலமாக பல்வேறு நகரங்களுக்கும் ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் நோய் தொற்று அதிகரிப்பு காரணமாக போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்கவில்லை. 


பல்வேறு மருத்துவமனைகளும் ஆக்சிஜன் இல்லை என்று கை விரிப்பதால், கொரோனா நோயாளிகள் ஒவ்வொரு மருத்துவமனையாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், கர்நாடகாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரே நாளில் 24 நோயாளிகள் பலியாகியுள்ளனர். கர்நாடக மாநிலம் சாமராஜநாகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் இதர காரணங்களுக்காக கொரோனா நோயாளிகள் 12 பேர், மற்ற நோயாளிகள் 12 பேர் என மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 


ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரேநாளில் 24 பேர் உயிரிழந்ததை அடுத்து சாமராஜநாகர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு பேசிய கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா, நாளை அமைச்சரவை கூட்டத்தை கூட்ட உத்தரவிட்டுள்ளார். மாவட்ட மருத்துவமனையில் 24 நோயாளிகளின் மரணம் குறித்து விசாரணைக்கு  சுகாதாரத்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.