சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார். தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. 159 இடங்களில் திமுக கூட்டணி முன்னணியில் உள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வருகிற 7ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இடம் பெறாமல் இருந்த நிலையில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
இந்நிலையில் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை கூடுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.இந்த கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வாகிறார் மு.க.ஸ்டாலின்.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 4.5.2021 செவ்வாய்க் கிழமை மாலை 6.00 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள “கலைஞர் அரங்கில்” நடைபெறும்.அதுபோது புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.