விராலிமலை தொகுதியில் எனது வெற்றியை அறிவிப்பதில் ஏன் தாமதம் :சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேள்வி
2021-05-03@ 09:06:15
சென்னை : விராலிமலை தொகுதியில் எனது வெற்றியை அறிவிப்பதில் ஏன் தாமதம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்பட்டன.இந்நிலையில், மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போட்டியிட்ட விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்கு எண்ணிக்கையின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள எண்ணுக்கும், ஆவணங்களில் இருந்து எண்ணுக்கும் வித்தியாசம் காணப்பட்டது.
இதனால் பல முறை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 4 முறை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு விடிய விடிய நடைபெற்றது.தற்போதும் தொடர்கிறது. இருப்பினும் 23வது சுற்று முடிவில் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் 19,044 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.இந்த நிலையில் விராலிமலை தொகுதியில் எனது வெற்றியை அறிவிப்பதில் ஏன் தாமதம் என்று சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடங்கி 24 மணி நேரத்தை கடந்துவிட்டது என்று ஆதங்கம் தெரிவித்த அவர், 23 சுற்று முடிந்துவிட்டது; 4 மணி நேரமாக முடிவுக்கு காத்திருப்பதாக விரக்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
மேலும் அவர் பேசியதாவதும், 'ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து, தற்போதும் நாங்கள் அமைதியாக உள்ளோம். எனது வெற்றியை தடுப்பதற்காக பல்வேறு இடையூறுகளை கொடுக்கின்றனர். 23 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு எனது வெற்றியை அறிவிக்க மறுக்கின்றனர்.தேர்தல் ஆணையம் உடனடியாக இதில் தலையிட்டு எனது வெற்றியை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை நாங்கள் இந்த மையத்தை விட்டுச் செல்லமாட்டோம்,' என்றார்.