டெல்லி: புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டும் திட்டத்தில் பிரதமருக்கான புதிய இல்லமும் கட்டப்பட இருக்கிறது. டெல்லியில் இப்போது நாடாளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. 100 ஆண்டுகளை கடந்து விட்ட இதற்கு பதிலாக, அதன் அருகிலேயே மிகவும் பிரமாண்டமான முறையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட, பிரதமர் மோடி திட்டமிட்டார். இதற்காக செலவுத் தொகை ரூ.971 கோடி. இந்த கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த டிசம்பர் 10-ம் தேதி நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்த நிலையில், இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை கடந்த டிச. 6ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிய கட்டிடம் கட்டுவதற்கு தடை விதித்தது. இருப்பினும், பூமி பூஜை நடத்த அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கான பூமி பூஜை திட்டமிட்டப்படி டிச.10-ம் தேதி நடந்தது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். இதன் கட்டுமான பணியை 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் 2022ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தடை காரணமாக, திட்டமிடப்பட்டபடி இது கட்டி முடிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையே புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டும் திட்டத்தில் பிரதமருக்கான புதிய இல்லமும் கட்டப்பட இருக்கிறது. 2022 டிசம்பருக்குள் பிரதமர் இல்ல கட்டுமான பணிகள் முடிக்கப்படும் என மத்திய பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது.