காரைக்கால்: புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த தேதியிலிருந்தே திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியில் பரபரப்பு நிலவி வந்தது. முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். பாரதிய ஜனதா அதிமுக என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில், ஏற்கனவே என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின்போது அமைச்சராக இருந்த பி.ஆர்.சிவாவிற்கு இடம் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், புதிதாக தொழில் அதிபர் ராஜசேகரன் பிஜேபி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த பி.ஆர்.சிவா அவரது ஆதரவாளர்களுடன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாக ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டார்.
இந்நிலையில், புதிதாக களமிறக்கி விடப்பட்ட தொழிலதிபர் ராஜசேகரனை குறுக்கு வழியில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்கிற நோக்கோடு திருநள்ளாறு தொகுதி முழுவதும் பாஜகவினரும், பா.ம.கவினரும் பறந்து, பறந்து வேலை செய்தனர். வாக்காளர்களுக்கு தங்ககாசு வினியோகம் செய்தனர். இந்த சம்பவம் திருநள்ளாறு மட்டுமல்லாது நாடு முழுவதும் அதிர்ச்சியை உருவாக்கியது. வாக்காளர்களுக்கு தங்ககாசு வினியோகம் செய்த சம்பவம் தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்கான விடை இன்று வரை தெரியாத நிலையில் நேற்று காரைக்காலில் உள்ள டாக்டர் கலைஞர் பட்ட மேற்படிப்பு மையத்தில் நடைபெற்ற திருநள்ளாறு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில் தங்க காசு விநியோகம் செய்த பாஜக இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
என்.ஆர் காங்கிரசிலிருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட்ட பி.ஆர்.சிவா 9796 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அடுத்தபடியாக பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ராஜசேகரன் 8416 வாக்குகள் பெற்று 2வது இடத்தையும் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் 7731 வாக்குகள் பெற்று 3ம் இடத்தையும் பிடித்தனர். திருநள்ளாறு தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு பாஜகவினர் தங்க காசுகள் விநியோகம் செய்ததால் அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில் திருநள்ளாறு தொகுதி மக்கள் அந்த எதிர்பார்ப்பை உடைத்து தங்க காசுக்கு விலை போகாமல் பாஜகவை 2வது இடத்திற்கு தள்ளியுள்ளனர்.
வாக்காளர்களுக்கு தங்க காசு கொடுத்து எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணியவர்களுக்கு திருநள்ளாறு தொகுதி வாக்காளர்கள் சரியான பாடம் புகட்டி விட்டனர். திருநள்ளாறில் பாஜக ஜம்பம் பலிக்கவில்லை.