டெல்லி : தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக.,விற்கு 4 இடங்கள் கிடைத்துள்ளன. கடந்த 25 ஆண்டுகளாக தமிழக சட்டசபையில் பாஜக.,விற்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் இருந்த நிலையில், தற்போது 4 எம்எல்ஏ.,க்கள் கிடைத்துள்ளனர். இதனால் தமிழகத்தில் பாஜக.,வின் ஓட்டு சதவீதமும் அதிகரித்துள்ளது.கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தி,மொடக்குறிச்சி தொகுதியில் சி.கே.சரஸ்வதி ஆகியோர் எம்.எல்.ஏக்களாக வெற்றி வாகை சூடியுள்ளனர். மொத்தம் 20 இடங்களில் போட்டியிட்ட நிலையில் நான்கு இடங்களில் வென்றது
இதற்கிடையில் 5 மாநிலங்களிலும் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கும், பாஜக வேட்பாளர்களுக்கும் பிரதமர் மோடி ட்விட்டர் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து 5 மாநில மக்களுக்கும் அந்தந்த மாநில மொழிகளில் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இதில் தமிழக மக்களுக்கு தமிழில் நன்றி தெரிவித்துள்ளார்.அந்த பதிவில் அவர், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மாநில நலனுக்காகவும் பெருமைமிகு தமிழ் பண்பாட்டை மென்மேலும் பறைசாற்றவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழக மக்களுக்கு உறுதியளிக்கிறேன். கடினமாக உழைத்த நமது தொண்டர்களைப் பாராட்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக அமித்ஷாவும் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து தமிழில் ட்விட் செய்திருந்தார். தமிழகத்தில் வெற்றி பெற்ற 4 பாஜக வேட்பாளர்களுக்கும் தமிழில் வாழ்த்து பதிவிட்டிருந்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.