சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தனது ஆதரவாளர்கள் அதிகம் பேர் வெற்றி பெற்றுள்ளதால், சசிகலா ஆதரவாளர்களை கட்சியில் இருந்து முழுமையாக வெளியேற்ற எடப்பாடி திட்டமிட்டுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற சசிகலா திட்டமிட்டார். இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது. இதனால் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறைக்கு சென்றதும், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக தலைமையிலான ஆட்சியை எடப்பாடி பழனிசாமியும் கைப்பற்றினர். பின்னர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியிலும் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டார். அதன்படி, நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்தநிலையில்தான், சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையானார். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ஒரு வாரம் பெங்களூரில் ஓய்வு எடுத்தார். பின்னர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அமமுக கட்சி பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தார். இதன்மூலம், அதிமுகவின் பொதுச்செயலாளராக நான் (சசிகலா) தொடர்ந்து நீடிப்பதாக காட்டிக் கொண்டார். அப்போது பேட்டி அளிக்கும்போதுகூட, அதிமுக கட்சியினர் ஒற்றுமையாக இருந்து வரும் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது அறிக்கையில்கூட அதிமுக பொதுச்செயலாளர் என்றே கையெழுத்து போட்டு வெளியிடப்பட்டு வந்தது. இதன்மூலம் அதிமுகவில் மீண்டும் இணைய சசிகலா முயற்சி செய்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சசிகலாவை கட்சியில் சேர்க்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இது தொடர்பாக டி.டி.வி.தினகரன் டெல்லி சென்று பாஜ தலைவர்களை மறைமுகமாக சந்தித்து, அதிமுக கட்சியில் சசிகலாவை சேர்த்தால் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்று அதிமுக தலைமையை வற்புறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். எடப்பாடி பிடிவாதமாக இருந்ததால், பாஜ முயற்சி எதுவும் நடக்கவில்லை.
இந்த நிலையில்தான் தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த பிப்ரவரி 26ம் தேதி அறிவித்தது. அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்க எடப்பாடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் விருப்பம் தெரிவிக்காததால், மார்ச் 4ம் தேதி தேதி, `அரசியலில் இருந்து தான் ஒதுங்கிக் கொள்கிறேன்’ என்ற ஒரு அறிவிப்பை சசிகலா திடீரென வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். காரணம், அதிமுகவில் இணைந்தால் மட்டுமே தான் நினைத்ததை சாதிக்க முடியும். அமமுக கட்சியில் நேரடியாக இணைந்தால், தனக்கு எதிர்காலம் இருக்காது. தேர்தல் முடியும் வரை ஒதுங்கி இருந்துவிட்டு, தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தால் மீண்டும் அதிமுகவை கைப்பற்ற முயற்சி செய்யலாம் என்று சசிகலா திட்டமிட்டுதான் ஒரு நாடகம் ஆடுகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில்தான் நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. அதேநேரம் தமிழகத்தில் வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அதன்படி அதிமுக மட்டும் தற்போது 66 இடங்களை பிடித்துள்ளது. இதில் வெற்றிபெற்ற பெரும்பாலான எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை முழுமையாக அதிமுக கைப்பற்றியுள்ளது.
அதேநேரம் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுக கட்சி தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பெரிய நெருக்கடியை கொடுக்கும், அதிக வாக்குகளை வாங்குவார்கள் என்று தேர்தலுக்கு முன் கூறப்பட்டது. ஆனால் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட அந்த கூட்டணியில் போட்டியிட்ட 234 பேரும் படுதோல்வி அடைந்தனர். ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இதன்மூலம் தமிழக அரசியலில் டி.டி.வி.தினகரன் செல்லாக்காசாக போய்விட்டார். சசிகலாவின் திட்டமும் இனி பலிக்காது என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களை கையில் வைத்து, அதிமுக கட்சியில் இருந்து சசிகலாவின் ஆதரவாளர்கள் அனைவரையும் ஓரங்கட்ட தற்போது முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை கட்சியில் இருந்து ஓரங்கட்டினால்தான், சசிகலா இனி அதிமுக பக்கம் திரும்பி பார்க்க மாட்டார் என்று எடப்பாடி கணக்கு போட்டுள்ளார். அதற்கான வேலையை எடப்பாடி விரைவில் தொடங்க உள்ளார். தமிழகத்தில் அதிமுக ஆட்சியை பறி கொடுத்தாலும், அதிமுக கட்சியை முழுமையாக கைப்பற்ற எடப்பாடியும், அவரது ஆதரவாளர்களும் திட்டமிட்டுள்ளனர். இதற்கான வேலைகளில் அவர்கள் விரைவில் தொடங்கவும் முடிவு செய்துள்ளனர்.