திரிணாமுல் சார்பில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி வெற்றி..!

2021-05-03@ 16:47:35

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, 32,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேற்குவங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி சிவ்பூர் தொகுதியில போட்டியிட்டார். பாஜக சார்பில் ரத்தீன் சக்ரவர்த்தி போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் மனோஜ் திவாரி 32,000 வாக்குகள் வித்தியாசத்தில் ரத்தீன் சக்ரவர்த்தியை தோற்கடித்தார். முன்னதாக தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், சிவ்பூர் தொகுதியில் மனோஜ் திவாரி தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் வீரராக இருந்து தற்போது முழுேநர அரசியல்வாதியாகவும், மக்கள் பிரதிநிதியாகவும் தேர்வு செய்யப்பட்ட மனோஜ் திவாரி, இந்திய அணிக்காக 12 ஒருநாள் மற்றும் 3 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் போட்டிகளில் 287 ரன்கள் எடுத்தார். ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்துள்ளார். மேலும், 98 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, சராசரியாக 28.72 ரன்கள் எடுத்துள்ளார். ஐ.பி.எல்லில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 75 ஆகும். ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக மனோஜ் திவாரி விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.