தேர்தல் வெற்றியை கொண்டாட வீதியில் யாரும் திரள வேண்டாம்!: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள்..!!
2021-05-02@ 13:37:47
சென்னை: கொரோனா பரவல் காரணமாக வீதியில் இறங்கி யாரும் கொண்டாட வேண்டாம் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்றைய முன்தினம் தெளிவாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கூறியபடி, தேர்தல் முடிவுகள் நமக்கு நிச்சயமாக வெற்றி செய்தியை தர போகிறது. தற்போது கொரோனா தொற்று தமிழகம் முழுவதும் தீவிரமாக பரவி கொண்டிருக்கின்ற காரணத்தினால் அதனை கழக தோழர்கள் மனதில் கொண்டு எந்தவித கொண்டாட்டமும் வீதிக்கு வந்து நடத்தாமல் அவரவர் குடும்பத்தோடு மகிழ்ச்சிகரமாக தங்கள் இல்லங்களில் இருந்து விழாவை கொண்டாடுங்கள்.
தயவு கூர்ந்து எக்காரணத்திற்காகவும் வீதிக்கு வரக்கூடாது. அண்ணா அறிவாலயத்தில் கூடியுள்ள அனைவரும் உடனடியாக களைந்து செல்ல வேண்டும் என்று தளபதி அன்பு கட்டளையிட்டிருக்கிறார். பட்டாசு வெடிப்பதோ, வீதிக்கு வந்து கூடுவதோ கூடாது...கூடாது...கூடாது என்று தளபதி கேட்டுக்கொண்டுள்ளார். தங்கள் அனைவரையும் தொலைக்காட்சிகளின் மூலமாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையின் சார்பாக வேண்டி கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் இந்த வேண்டுகோளை ஏற்று வீதியில் இறங்கி கொண்டாட வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.