18-45 வயதினருக்கு தடுப்பூசி போடும் திட்டம் 22 மாநிலங்களில் ஒத்திவைப்பு: 6 மாநிலங்கள், தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே தொடங்கியது

2021-05-02@ 00:14:05

புதுடெல்லி: நாட்டில் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம், தமிழகம் உட்பட 22க்கும் மேற்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒத்திவைக்கப்பட்டன. 6 மாநிலங்கள், தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இது தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் ஏற்கனவே சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மே 1ம் தேதி முதல் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இவை கட்டண அடிப்படையில் மட்டுமே போடப்படுகிறது. இதற்கான முன்பதிவு கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கியது.

நேற்று வரையில் கிட்டத்திட்ட 3 கோடி பேர் வரை முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால் இவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை நேற்று தொடங்க முடியாமல் மாநில அரசுகள் தவித்து வருகின்றன.
இதனால், நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், சட்டீஸ்கர், குஜராத் மற்றும் ஒடிசா மாநிலங்களில் மட்டுமே நேற்று திட்டமிட்டப்படி இந்த வயதினருக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது. தமிழகம் உட்பட 22 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் தொடங்கப்படவில்லை. மகாராஷ்டிரா, கர்நாடகா உட்பட சில மாநிலங்கள், இந்த தடுப்பூசியை இலவசமாக போடுவதாக அறிவித்துள்ளன.

இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றின் உற்பத்தி திறன் குறைவாக இருப்பதால், மக்களுக்கு தேவையான அளவுக்கு இந்த நிறுவனங்களால் சப்ளை செய்ய முடியவில்லை. இந்த பிரச்னையை சமாளிக்க, இந்த நிறுவனங்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் 3வது தடுப்பூசியாக பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதல் தொகுப்பு, விமானம் மூலம் நேற்று ஐதராபாத் வந்து சேர்ந்தது. இவை இன்று முதல் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.