கீழடி 7ம் கட்ட அகழாய்வில் தங்கக்காதணி கண்டெடுப்பு

2021-05-02@ 02:22:46

திருப்புவனம்: கீழடி 7ம் கட்ட அகழாய்வில் தங்கக்காதணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறை சார்பில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. பிப்.13ல் தொடங்கிய பணிகள் கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகின்றன. கீழடியில் மொத்தம் 5 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. ஏற்கனவே தோண்டப்பட்ட 3 குழிகளில் இருந்து கல் கொழுவான உழவு கருவி, சுடுமண் தாயக்கட்டை, கருப்பு பானை ஓடுகள், கருப்பு-சிவப்பு வண்ண பானை ஓடுகள், சிறிய கலயம் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன.

கணேசன் என்பவரது ஒரு ஏக்கர் நிலத்தில் நடந்த அகழாய்வில் கடந்த வாரம் கூடுதலாக 3 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில் ஒரு குழியில் நேற்று முன்தினம் 3 அடி ஆழத்திலேயே 4.5 செமீ நீளம் கொண்ட தங்கக்காதணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. வளைவான அமைப்பில் கிடைத்த இந்த காதணியின் விட்டம் 1.99 செ.மீ கொண்டதாக உள்ளது. பழங்காலத்தில் காதணி விழாக்களில் அணிவிக்கும் ஆபரணமாக இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். இதன் ஒரு பகுதி கூர்மையானதாக உள்ளது. ஏற்கனவே 6ம் கட்ட அகழாய்வில் அகரத்தில் தங்கக்காதணி (பெண்கள் காதில் அணியும் பாம்படம் அல்லது தண்டட்டி) என்ற பொருள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.