ஸ்பிக்நகர் : தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து செடியில் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த வருடம் நன்கு வளர்ந்த நிலையில் காணப்பட்ட வாழைத்தார்கள் கொரோனா நோய் காரணமாக ஏராளமான சந்தைகள் மூடப்பட்டதால் போதுமான விலை கிடைக்கவில்லை. இதனால் குறைந்த விலைக்கே விற்பனையானது. இந்த நிலையில் தற்போது உளுந்து செடிகளில் நோய் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. அதன் தாக்குதலை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
1 ஏக்கருக்கு உளுந்து விதைப்பதற்கு ரூ.1000 கொடுத்து விவசாயிகள் வாங்கினர். அதனை பதிப்பதற்கு ரூ.3000, தாள் அறுக்க ரூ.6000, மருந்து தெளிக்க இரண்டு முறை ரூ.1500, அறுவடை கூலி ரூ.6000 என ரூ.17,500 செலவு செய்துள்ளனர். வழக்கமாக 3 குவிண்டால் முதல் 6 குவிண்டால் வரை விளையும். ஆனால் இந்த முறை 1 குவிண்டால் கிடைத்தாலே அதிகம் என்று கூறும் விவசாயிகள் 1 குவிண்டால் உளுந்து ரூ.5000க்கு விற்பனை செய்யலாம். இதன் மூலம் ஏக்கருக்கு ரூ.12,000 வரை நஷ்டம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
இது குறித்து அத்திமரப்பட்டி விவசாயி ராஜசேகர் கூறுகையில், ‘உளுந்து 80 நாள் பயிராகும். உளுந்து சாகுபடியில் உழவு முதல் அறுவடை வரை ஏக்கருக்கு ரூ.18 ஆயிரம் செலவு செய்துள்ளோம். இதனால் உளுந்து பயிர்களும் நல்ல முறையில் வளர்ந்து வந்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உளுந்து செடிகளை மர்ம நோய் தாக்கியது.
மருந்து தெளித்தும் அதன் தாக்குதல் கட்டுபடவில்லை. இதனால் உளுந்து செடிகள் பச்சையத்தை இழந்து மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. இதனால் உளுந்து சாகுபடியில் நஷ்டத்தை சந்தித்து உள்ளோம். எனவே வேளாண் அதிகாரிகள் அத்திமரப்பட்டி பகுதியில் ஆய்வு செய்து உளுந்து செடிகளில் ஏற்பட்டுள்ள நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.