ஸ்புட்னிக் தடுப்பூசி ஐதராபாத் வந்தது

2021-05-02@ 02:07:14

புதுடெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி நேற்று ஐதராபாத் வந்து சேர்ந்தது. நாட்டில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. கடந்த ஜனவரி 16ம் தேதியில் மக்களுக்கு தடுப்பூசி அளிக்கும் திட்டம் தொடங்கியது. நேற்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியும் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக தடுப்பூசி தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, ரஷ்யாவிடம் இருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதை வாங்கி விநியோகிக்கும் உரிமையை ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டி நிறுவனம் பெற்றது. ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி, ரஷ்யாவில் இருந்து முதல் கட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசி விமானம் நேற்று ஐதராபாத் வந்து சேர்ந்தது. இவை, இன்று முதல் மக்களுக்கு போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.