புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கத்தால் நாடே அல்லோகலப்பட்டு வருகிறது. தடுப்பூச்சி போடும் பணி ஒருபக்கம் நடந்தாலும், தொற்றின் தீவிரத்தை குறைக்க முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. இதில், மாநில அரசுகள் நிதி இல்லாமல் தவித்து வருகின்றன. இந்நிலையில், தமிழகம் உட்பட 22 மாநிலங்களுக்கு பேரிடர் நிதியாக ரூ.8,873 கோடியை மத்திய அரசு நேற்று வழங்கியது. இதில், தமிழகத்துக்கு ரூ.400 கோடி அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொகையில் 50 சதவீதத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கை செலவுகளை பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, ரூ.4,436 கோடியை மாநில அரசுகள் அவசர தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். பரிசோதனை உபகரணங்கள், மருந்துகள், தனிமை மையங்களில் உள்ளவர்களுக்கான உணவு, உடை போன்ற பாதுகாப்பு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக, மாநில அரசுகள் இந்த நிதியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது.