1953ல் கைவிட்டு போனதை மீண்டும் வசப்படுத்த முயற்சி ஏர் இந்தியாவை வாங்க டாடா நிறுவனம் தீவிரம்: அதிக விலையை குறிப்பிட்டு அசத்தல்

2021-05-02@ 01:47:32

புதுடெல்லி: ஏர் இந்தியாவை வாங்கும் ஏலத்தில் டாடா நிறுவனம் அதிக விலை குறிப்பிட்டு முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்த ஆரம்பகட்ட ஏலத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவன உரிமையாளர் அஜய் சிங்கை காட்டிலும் டாடா குழுமத்தின் டாடா சன்ஸ் நிறுவனம் அதிக விலை குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஏர் இந்தியாவை வாங்கும் முயற்சியில் டாடா நிறுவனம் முன்னிலையில் உள்ளது. தற்போது, கொரோனா 2வது அலை காரணமாக இதன் விற்பனை தாமதமாகும் என கருதப்படுகிறது. மத்திய அரசோ இந்தாண்டுக்குள் விற்பனையை முடிக்க  திட்டமிட்டுள்ளது. கடந்த 1953ல் டாடா நிறறுவனத்திடம் இருந்தே ஏர் இந்தியா பங்குகளை 100 சதவீதம் மத்திய அரசு வாங்கி, பொதுத்துறை நிறுவனமாக மாற்றியது. இப்போது, இதை மீண்டும் தன்வசப்படுத்துவதில் டாடா தீவிரமாக உள்ளது.

பறந்து வந்த காலம்
* 1932ல் ‘டாடா ஏர்லைன்ஸ்’ என்ற பெயரில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் டாடா நிறுவனம் விமான சேவையை தொடங்கியது.
* 1945ம் ஆண்டு வரையில் இதே பெயரில் அது செயல்பட்டு வந்தது
* 1946ல் ‘ஏர் இந்தியா நிறுவனம்’ என பெயர் மாற்றப்பட்டது.
* 1948ல் ஏர் இந்தியாவின் 49 சதவீத பங்கை மத்திய அரசு வாங்கியது.
* 1953ல் ஏர் இ்ந்தியா நிறுவனத்தின் மொத்த பங்கையும் டாடா நிறுவனத்திடம் இருந்து வாங்கிய மத்திய அரசு, அதை பொதுத்துறை நிறுவனமாக்கியது.
* பின்னர், இந்த நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா என இரண்டாக பிரிக்கப்பட்டது.