சட்டமன்ற தேர்தல் 2021!: காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் 57 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை..!!

2021-05-02@ 16:06:51

வேலூர்: காட்பாடி தொகுதியில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் 57 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், அதிமுக சார்பில் வி.ராமு, நாம் தமிழர் கட்சி சார்பாக ச.திருக்குமரன், அமமுக சார்பில் ஏ.எஸ்.ராஜா, மக்கள் நீதி மய்யம் சார்பில் கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயகக் கட்சியின் எம்.சுதர்சன் ஆகியோர் போட்டியிட்டனர்.


காட்பாடி தொகுதியில் முன்னிலை நிலவரம் மாறி மாறி வந்து கண்ணாமூச்சி ஆடி வருகிறது. திமுக வேட்பாளர் துரைமுருகன் தொடர்ந்து 5, 6 சுற்றுகளில் பின்தங்கி இருந்தார். இந்நிலையில்,  17வது சுற்று முடிவில்  துரைமுருகன் 57 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காட்பாடி தொகுதியில் திமுக 55,324 வாக்குகளும், அதிமுக 55,267 வாக்குகளும் பெற்றுள்ளன. 11 முறை சட்டப்பேரவை தேர்தலில் களம் கண்ட துரைமுருகன், 9 முறை காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு 7 முறை வென்றுள்ளார். இம்முறை 10வது முறையாக இத்தொகுதியில் அவர் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.