கர்ப்பிணிக்கு நடுரோட்டில் பிரசவம்

2021-05-02@ 01:04:01

பெரம்பூர்: கொடுங்கையூர் சிடகோ மெயின் ரோடு பகுதியில் நேற்று காலை 7 மணி அளவில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த 30 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி, திடீரென சாலையில் விழுந்து கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, அவர் வயிற்று வலியால் துடிதுடித்து கொண்டிருந்தார். தகவலறிந்து அங்கு வந்த கொடுங்கையூர் நுண்ணறிவுப் பிரிவு காவலர் திருஞானவேல் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த சங்கர் ஆகிய இருவரும், அந்த பெண்ணை பொதுமக்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது, திடீரென அந்த பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த பெண் மின்ட் பகுதியில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் கொடுங்கையூர் சின்னாண்டி மடம் மூன்றாவது தெருவை சேர்ந்த மாலதி (30) என்பதும், இவரது கணவர் குணசேகரன் கூலி தொழிலாளி என்பதும் தெரியவந்தது. தற்போது மருத்துவமனையில் குழந்தையும், தாயும் நலமாக உள்ளார்கள். இந்த சம்பவம் கொடுங்கையூர்  பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.