இயற்கை விவசாய பொருட்களில் தயாரிப்பு திருப்பதியில் ஆர்கானிக் லட்டு: வழக்கத்தை விட சுவையும் சூப்பர்

2021-05-02@ 01:55:32

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்படும் அரிசி, காய்கறிகள், வெல்லம் மற்றும் பருப்பு வகைகளை கொண்டு நெய்வேத்தியம் தயார் செய்து சுவாமிக்கு சமர்பிக்கப்படுவது நேற்று மீண்டும் தொடங்கியது. இதில், இயற்கை விவசாயத்தால் ஆன பொருட்களை கொண்டு சுவாமிக்கு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. இது குறித்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறியதாவது: ஏழுமலையானுக்கு இயற்கை விவசாய முறையில் விளைவிக்கும் விவசாய பொருட்களை கொண்டு  பிரசாதங்களை தயார் செய்யும் பாரம்பரியம் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முந்தையது. இதன் ஒரு பகுதியாக, இயற்கை விவசாயத்தில் இருந்து தயாரிக்கப்படும் அரிசி, காய்கறிகள், வாழைப்பழங்கள், வெல்லம் மற்றும் நாட்டு பசு நெய் ஆகியவற்றின் மூலம் சுவாமிக்கு பிரசாதமாக தயார் செய்து வழங்குவதன் மூலம் பூர்வ கால நெய்வேத்தியம் சமர்பிக்கும் விதமாக கொண்டு வரப்பட்டது.

பக்தர்கள் ஒவ்வொரு நாளும் பெறும் பிரசாதத்திற்கும், இந்த பிரசாதத்தின் சுவையில் நிறைய வித்தியாசம் உள்ளது. ஏழுமலையானின் ஆசீர்வாதத்துடன், இயற்கை விவசாய பொருட்களை கொண்டு நிரந்தரமாக நெய்வேத்தியம் தயார் செய்து வழங்கப்பட உள்ளது. இதேபோல், இயற்கை விவசாயத்தில் தயார் செய்யப்படும் மூலப்பொருட்கள் வெல்லம் ஆகியவற்றைக் கொண்டு லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாங்கள் அதிகாரிகளுடன் மதிப்பாய்வு செய்து, இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து விளைபொருட்களை நேரடியாக சேகரிக்கும் சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.