கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங். வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை!: பாஜக பின்னடைவு..!!

2021-05-02@ 16:53:49

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை வகித்து வருகிறார். கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் உடல்நலக்குறைவால் காலமானதால் இடைத்தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலும் நடைபெற்றது. இடைத் தேர்தலில் பா.ஜ.க-வின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் வேட்பாளராக வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் ஆகியோர் நேருக்கு நேர் மோதினர். வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது முதல் விஜய் வசந்த் முன்னிலை வகித்து வந்தார். 


இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தற்போது வரை முன்னிலையில் உள்ளார். விஜய் வசந்த் 3 லட்சத்து 71 ஆயிரத்து 169 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 2 லட்சத்து 58 ஆயிரத்து 712 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை விட 1 லட்சத்து 12 ஆயிரத்து 457 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வசந்த் வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம் நாடாளுமன்றத்துக்கு விஜய் வசந்த் செல்கிறார்.