எப்போது கிடைக்கும்?

2021-05-02@ 00:22:38

கொரோனா பெருந்தொற்று இந்தியாவை தாக்கியதில் இருந்தே அதை சமாளிப்பதற்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதே உண்மை. கடந்த ஆண்டு நவம்பர் வாக்கில் கொரோனா முதல் அலையின் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் வர, மொத்த போருமே முடிந்துவிட்டது என்ற நினைப்பு ஆட்சியாளர்களுக்கு வந்ததுதான் கொடூரம். மற்ற நாடுகளை பார்த்து பாடம் படித்திருந்தால், அடுத்து இரண்டாவது அலை சுனாமியை போல் தாக்கும் என்பது தெரிந்திருக்கும். ஆனால், ஆட்சியாளர்களுக்கோ பீகார் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பதை தடுப்பது, புதுச்சேரியில் ஆட்சியை கவிழ்ப்பது, தற்போது 5 மாநில தேர்தல் என்று அடுத்தடுத்த இலக்குகள்.

இதற்காக நாட்டில் கொரோனாவே இல்லை என்பது போன்ற காட்சி அரங்கேற்றப்பட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. பிப்ரவரி துவங்கி கொரோனா இரண்டாம் அலை இப்போது நாட்டையை கதிகலங்க செய்து வருகிறது. முதல் அலையில் நமக்கு இல்லாத ஆயுதம், இப்போது இரண்டாம் அலையில் நம்மிடம் இருந்தது- அதுதான் தடுப்பூசி. அதையாவது ஒழுங்காக பயன்படுத்தினார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக உள்ளது. இரண்டாம் அலை தாக்கும் முன்பே கடந்த ஜனவரி 16ம் தேதி நாடு முழுவதும் 3,006 மையங்களில் தடுப்பூசி திட்டத்தின் முதல் கட்டம் துவங்கியது. இதில், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் மார்ச் 1ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. பின்னர் ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி
போடப்பட்டு வருகிறது. இப்போது, நாடு முழுவதும் 57,123 தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பலரும் தயங்கினர். பாதித்தோர் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகமானதும் தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்தது. அப்போதுதான், நாட்டில் தேவையான தடுப்பூசி மருந்து இல்லை, அதிகமாக தயாரிக்கவும் வழியில்லை என்று தெரிந்தது. தட்டுப்பாடு காரணமாக பல தடுப்பூசி மையங்களில் கூட்டம் அலைமோதியது. பல மையங்கள் மூடப்பட்டன. இந்நிலையில், மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி என்ற அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடவே தடுப்பூசி இல்லாத போது இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அதையும் மீறி இணையத்தில் முன்பதிவு நடந்தது. கோடிக்கணக்கானோர் முன் பதிவு செய்துள்ளனர் என்ற தகவல் பரப்பப்பட்டது.

திட்டமிட்டபடி நேற்று அந்த திட்டம் துவங்கியிருக்க வேண்டும். ஆனால், 6 மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் திட்டத்தை தொடங்க முடியவில்லை. காரணம் தடுப்பூசி இல்லாததே. வெறும் கையில் முழம் போடுவதைவிட்டுவிட்டு, தடுப்பூசி உற்பத்தியை முன்கூட்டியே அதிகரிக்க நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த நிலை உருவாகியிருக்காது. இப்போது, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தாவது தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்க வேண்டும். ஸ்டாக் இல்லாத தடுப்பூசிக்கு முன்பதிவு செய்த மத்திய அரசு, எப்போது தடுப்பூசி வரும் என்பதை இனியாவது தெளிவாக்குமா?

Tags:

When available? எப்போது கிடைக்கும்?