புதுடெல்லி: ‘கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தவறினால், மோடி அரசு பதவி விலக வேண்டும்,’ என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியறுத்தி உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனி ஸ்ட், கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனிஸ்ட், அனைத்திந்திய பார்வர்டு பிளாக் மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து நேற்று கூட்டாக அறிக்கை வெளியிட்டன. அதில், கூறியிருப்பதாவது: நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான சுகாதார நெருக்கடியின் பிடியில் இந்தியா சிக்கியிருக்கிறது. மோசமான விஷயம் என்னவென்றால் கொரோனா நோய் தொற்றின் கொடுமை தீவிரம் அடைந்துள்ளது. தொற்றுநோயை எதிர்கொள்வதற்கும், மக்களின் உயிரை பாதுகாப்பதற்கும், மக்களின் வாழ்வாதாரத்துக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நாடு முழுவதும் இலவச தடுப்பூசி திட்டத்தை தொடங்க வேண்டும். பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த ரூ.35 ஆயிரம் கோடி, பிரதமர் கேர் நிதியில் இருந்து பணத்தை விடுவித்து கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு செலவு செய்யுங்கள். ரூ.20 ஆயிரம் கோடியில் சென்ட்ரல் விஸ்டா திட்ட கட்டுமான பணிகளை நிறுத்துங்கள். கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு இந்த பணத்தை செலவிடுங்கள். வருமான வரி செலுத்தாத வரம்பில் உள்ள குடும்பங்களுக்கு நேரடியாக ரூ.7500ஐ அரசு வழங்க வேண்டும். எந்த ஒரு ஆலோசனையையும் கேட்காமல் ஒரு ஆண்டை அரசு வீணடித்துள்ளது. மேலும், நேரத்தை இழக்க முடியாது. குறைந்தபட்சமாக மேலே கூறிய அனைத்தையும் அரசு வழங்க வேண்டும் இல்லையென்றால் தொடர்ந்து பதவியில் நீடிப்பதற்கான தார்மீக அதிகாரத்தை மத்திய அரசு முற்றிலுமாக இழக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.