மன்னார்குடி : பயறுவகைப் பயிர்களான உளுந்து, பச்சைப்பயறு, துவரை, தட்டைப்பயறு உள்ளிட்டவை மனிதர்களுக்கு தேவையான புரதச்சத்தை அதிகளவில் தன்னகத்தே கொண்டுள்ளன. புரதசத்தானது மனிதர்களின் உடல் வளர்ச்சிக்கும், அறிவாற்றலுக்கும் மிகவும் தேவையானது.
தானியப் பயிர்களான கோதுமையைவிட இரண்டு மடங்கும், அரிசியைவிட மூன்று மடங்கும் அதிக புரதச் சத்தானது (20 முதல் 24 சதம்) பயறுவகைப் பயிர்களில் உள்ளது. மேலும் தாதுஉப்புக்கள், அமினோஅமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகியவையும் அதிகளவில் உள்ளன. ஆனால் பயறுவகைப் பயிர்கள் பல்வேறு வகையான பூச்சிகளின் தாக்குதலால் மகசூலில் பாதிப்பு உண்டாகிறது.
எனவே, நமது தேவைக்கு போதுமான அளவு பயறு வகைப் பயிர்களை உற்பத்தி செய்ய இயலாத நிலைக்கு பூச்சிகளின் தாக்குதலும் முக்கிய காரணியாக அமைகின்றன. பயறுவகைப் பயிர்களை 48 குடும்பங்களைச் சார்ந்த 200க்கும் அதிகமான பூச்சிகளும், 7 வகையான இலைச் சிலந்திகளும் தாக்கி சேதத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, வம்பன் பயறுவகை ஆராய்ச்சி மைய பூச்சியியல் துறை உத விப் பேராசிரியர் முனைவர் ராஜா ரமேஷ், பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் குணசேகரன் மற்றும் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் கூறுகையில்,
பயறுவகை பயிர்களை தாக்கும் பூச்சிகள்:
அசுவிணி: குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் இலைகள், தண்டு, பூக்கள் மற்றும் பிஞ்சுகளில் கூட்டமாகக் காணப்படும். இளந்தளிர், தண்டு மற்றும் காய்களில் உள்ள சாற்றை உறிஞ்சுவதால் செடிகள் வளர்ச்சிக்குன்றி வெளி றிய நிறத்துடன் காணப்படும். இவை தேன் போன்ற திரவத்தைச் சுரப்பதால் அவற்றை உண்பதற்கு எறும்புகள் அதிக அளவில் காணப்படும். அசுவிணி யானது கருப்பு நிறத்தில் பளபளப்பாகவும், பூச்சிகளின் வயிற்றுப் பகுதியில் குழாய் போன்ற அமைப்புடன் காணப்படும்.
வெள்ளை ஈ : இலைகளின் அடிப்புறத்தில் காணப்படும் குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் அவற்றின் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, சுருங்கி வளர்ச்சிக்குன்றி காணப்படும். இவை பயறுவகைப் பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் மற்றும் இலை பரப்பு நெளிவு நோயைப் பரப்பும் ஆற்றல் கொண்டவை. இதன் தாக்குதலால் 30 முதல் 70 சதம் மகசு{ல் இழப்பு உண்டாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை அளவில் சிறியதாக வெள்ளை நிற இறக்கைகளுடன் காணப்படும்.
தண்டு ஈ : தண்டு ஈயின் புழுக்கள் கால்களற்று வெண்மை நிறத்திலிருக்கும். உடலின் முன்புறம் கூர்மையாக இருக்கும். தாய் ஈ கருமை நிறமாகவும், அளவில் சிறியதாகவும் காணப்படும். புழுவானது இலைக்காம்பு, இளந்தண்டு மற்றும் இளங்கிளைகளை துளைத்து பயிரை சேதப்படுத்தும். இளம் பருவத் தில் இதன் தாக்குதல் காணப்பட்டால் செடிகள் திட்டுத் திட்டாகக் காய்ந்து காணப்படும். பின்பு வாடி இறந்துவிடும்.
அசுவிணி மற்றும் வெள்ளை ஈ, தண்டு ஈயைக் கட்டுப்படுத்தும் முறைகள்: ஒரு கிலோ விதைக்கு இமிடா குளோபிரைட் 600 எப்.எஸ் - 5 மிலி என்ற விகிதத்தில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். வெள்ளை ஈக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க ஒரு ஏக்கருக்கு மஞ்சள் அட்டை ஒட்டுப் பொறி 12 என்ற அளவில் வைக்கவேண்டும்.
வேப்பெண்ணெய் 2 சதம் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மி.லி என்ற அளவில் தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும். வேப்பங்கொட்டை சாறு 5 சதம் இரு முறை தெளித்தல் வேண்டும். வேம்பு பூச்சிக்கொல்லி மருந்தான அசடிராக்டின் 0.03 சத மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மி.லி என்ற அளவில் தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து தெளிக்க வேண்டும்.
பூச்சிகளின் எண்ணிக்கை பொருளாதார சேதநிலை தாண்டினால் கீழ்க்கண்ட டைமீதோயேட் 30 ஈசி - 200 மி.லி. தயோமீத்தாக்சாம் 25 டபிள்யூ.ஜபி - 50 கிராம் இமாமெக்டின் பென்சோயேட் 5 எஸ்.ஜ - 100 கிராம் போன்ற பூச்சிக் கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப் பானால் தெளிக்க வேண்டும்.
நன்மை செய்யும் பூச்சிகளான பொறி வண்டுகள், கண்ணாடி இறக்கைப்பூச்சி, அழிவு நாவாய் பூச்சிகள், தட்டான்கள், குளவியினங்கள் உள்ளிட்ட பூச்சிகள் மற்றும் சிலந்தி இனங்கள் காணப்பட்டால் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப் பதனைத் தவிர்க்க வேண்டும். இவை இயற்கையாகவே தீமை செய்யும் பூச்சிகளை உண்டு அழிக்கும். இவ்வாறு வேளாண் பேராசிரியர்கள் ராஜா ரமேஷ், குணசேகரன், ராமசுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்தனர்.