தமிழகத்தின் முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்... 10 ஆண்டுகளுக்கு பிறகு தனி பெரும்பான்மையுடன் அமைகிறது திமுக ஆட்சி

2021-05-02@ 14:24:56

சென்னை : தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான சட்டமன்றப் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெகுமக்களின் அமோக ஆதரவுடன் தேர்தலைச் சந்தித்தது.வாக்குப்பதிவு நிறைவடைந்து 26 நாட்கள் ஆன நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரும்பான்மையான தொகுதிகளில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகளுடன் முன்னணி வகித்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, திமுக 152 இடங்களிலும் அதிமுக 81 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. தி.மு.க கூட்டணி வேட்பாளர்களின் மகத்தான் வெற்றியைத் தொடர்ந்து, 119 தொகுதிகளில் முன்னிலை வகித்து அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.இதனால் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதால் அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரளத் தொடங்கியுள்ளது. அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் இனிப்புகள் பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.