மன்னர்காலத்தில் போர் வரலாறு போல் இறந்தவர்களை எரியூட்ட இடம் தேடி அலைகிறோம்: முத்தரசன் பேட்டி

2021-05-02@ 02:24:05

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் மற்ற நாடுகளைவிட லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிற நிலையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கை வசதிகள் போதுமான அளவுக்கு இல்லாத நிலைமை போன்ற மிகமோசமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

மன்னர்கள் காலத்தில் நடைபெற்ற போர்களில் ஆயிரக்கணக்கில் பலியான வீரர்களையும், பொதுமக்களையும் புதைப்பதற்கும், எரிப்பதற்கும் இடம் இல்லாமல் தவித்த காலம் ஒன்று உண்டு என்று புத்தகங்களில் வரலாறாக படித்திருக்கிறோம். இன்று வாழ்க்கையில் அந்த நிலையை நேரடியாக சந்திக்க கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஒரு பக்கம், பாதிக்கப்பட்டவர்கள் வாகனத்தில் இருந்தபடியே காத்துக்கிடக்கும் நிலைமையும் இருந்து வருகிறது. மற்றொரு பக்கம் இறந்தவர்களை எரியூட்ட கூட வரிசையாக உடல்களை வைத்துக்கொண்டிருக்கிற மோசமான நிலைமைகளும் ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.