சென்னை: அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடாத நிலையில் சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று துவக்கப்பட்டுள்ளது. கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. இதுவரை 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மே 1ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கான இணையதள பதிவு கடந்த 28ம் தேதி தொடங்கியது. ஆனால், போதிய அளவில் தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் திட்டமிட்டபடி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கப்படவில்லை என்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
மேலும் தமிழகத்தில் கோவிஷீல்டு 5.39 லட்சமும், கோவாக்சின் 1.94 லட்சம் வரை தடுப்பூசி இருப்பு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 2வது டோஸ் தடுப்பூசி இன்னும் நிறைய பேருக்கு போட வேண்டிய நிலையில் 18 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டால் தட்டுப்பாடு ஏற்படும் என்பதற்காக நேற்று தடுப்பூசி போடும் பணி துவங்கவில்லை. ஆனால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று காலை முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ரூ.250 கொடுத்த தடுப்பூசி போட்டாலும் பரவாயில்லை கொரோனாவில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் பொதுமக்கள் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.