டெல்லி: தொடர் தோல்வியில் சிக்கியிருந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் நீக்கப்பட்டு, புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரின் முதல் சுற்று லீக் ஆட்டங்கள் இன்று மாலையுடன் முடிகின்றன. டெல்லியில் நடைபெறும் அந்த கடைசி(28வது) லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இது முதல் சுற்று லீக் ஆட்டத்தின் கடைசி ஆட்டமாகும். இந்த 2 அணிகளும் புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ளன. ராஜஸ்தான் இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 4 தோல்விகளுடன் 7வது இடத்தில் இருக்கிறது.
ஐதராபாத் அணியும் 6 ஆட்டங்களில் விளையாடி ஒரே ஒரு வெற்றி, 5 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. அதனால் ஐதராபாத் கேப்டன் பதவியில் இருந்த டேவிட் வார்னர்(ஆஸி) நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன்(நியூசி) நியமிக்கப்பட்டள்ளார். இரு அணிகளும் பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்தக் கொள்ள இனி வெற்றிகள் அவசியம். அதனால் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தானும், புதிய கேப்டன் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணியும் வெற்றிக்கு மல்லுக்கட்டும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும்.
* இதுவரை மோதியதில்...
ஐபிஎல் தொடர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இதுவரை 13ஆட்டங்களில் நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அவற்றில் ஐதராபாத் 7 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 6 ஆட்டங்களிலும் வெற்றி வாகை சூடியுள்ளன. இரு அணிகளும் மோதிய 13 ஆட்டங்களில் 9 ஆட்டங்களில் 2வதாக பேட்டிங் செய்த அணிதான் வென்று இருக்கிறது. கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் ஐதராபாத் 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஐபிஎல் தொடர்களில் இரு அணிகளும் மோதிய ஆட்டங்களில் அதிகபட்சமாக ஐதராபாத் 201, ராஜஸ்தான் 198ரன் குவித்திருக்கின்றன. குறைந்தபட்சமாக ஐதராபாத் 127, ராஜஸ்தான் 102ரன் எடுத்துள்ளன.