சட்டமன்ற தேர்தல் 2021!: தமிழகத்தில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் 3-வது இடத்தில் நாம் தமிழர் கட்சி..!!

2021-05-02@ 12:32:40

சென்னை: தமிழகத்தில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் சதவீத அடிப்படையில் மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. தற்போது தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது. சிறிய தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை முடிவு பிற்பகல் 3 மணியளவிலும் பெரிய தொகுதிகளில் அதிக மேஜைகள் போடப்படுவதால், வாக்கு எண்ணிக்கை சுற்றுகளும் அதிகரித்து, முடிவுகள் முழுமையாக வெளியாக நள்ளிரவு வரை ஆகலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் 3-வது இடத்தில் நாம் தமிழர் கட்சி உள்ளது. திமுக கூட்டணி இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 8.58 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி 7.87 சதவீதம் வாக்குகளை பெற்று 2ம் இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சி 1.15 சதவீதம் வாக்குகள் பெற்று 3ம் இடத்தில் உள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 15 முதல் 20 சதவீதம் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டிருக்கும் பட்சத்தில் வாக்கு எண்ணிக்கையில் நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தை பெற்றிருக்கிறது. 


திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்து வருகிறார். நயினார் நாகேந்திரன் 22532 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணன் 15,399 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.