இந்தியாவில் கொரோனாவால் ஒரு விநாடிக்கு 4 பேர் பாதிப்பு; நிமிடத்திற்கு 2 பேர் உயிரிழப்பு!: அதிரவைக்கும் தரவுகள்..!!
2021-05-01@ 12:37:02
டெல்லி: இந்தியாவில் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 2 கொரோனா மரணங்கள் நிகழ்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றின் 2ம் அலை அதிதீவிரமடைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி வருகின்றனர். உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேசெல்கிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் நிமிடத்திற்கு 2 பேர் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கடந்த 1 மாதத்தில் இந்தியாவில் 65 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 10 நாட்களில் மட்டுமே 31 லட்சத்து 46 ஆயிரம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கையில், சுமார் 73 சதவீத தொற்று பாதிப்பு மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவால் ஏற்படும் மரணங்களில் நான்கில் ஒன்று இந்தியாவில் நிகழ்வதாகவும் ஒரு நிமிடத்திற்கு கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் ஒரு வினாடிக்கு 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.