சென்னை: வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளையும் மின்னணு இயந்திரத்தில் காட்டும் எண்ணிக்கையையும் சரிபார்க்கும் 17-சி படிவத்தை வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் வாக்கு பதிவு மையங்களுக்கு கொண்டு வருவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை வைத்துள்ளது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அதிமுக சார்பில் அதன் வழக்கறிஞர் பிரிவு மாநில இணைச்செயலாளர் சி.திருமாறன் நேற்று கொடுத்த கோரிக்கை மனு: வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை விவரங்கள் அடங்கிய 17-சி படிவம் மற்றும் எழுதும் தாள்கள் கொண்டுவர அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த படிவம் கண்டிப்பாக வாக்கு எண்ணிக்கைக்கு தேவை. அப்போதுதான் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையையும் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் காட்டும் எண்ணிக்கையையும் ஒப்பிட முடியும். எனவே, 17-சி படிவம் அனுமதிக்கப்படவில்லை என்றால் வாக்கு இயந்திரத்தை திறக்கும்போது 17-சி படிவத்தை தேர்தல் அதிகாரி வேட்பாளர்களின் ஏஜென்ட்களுக்கு காட்டுமாறு உத்தரவிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் வேட்பாளர்கள், ஏஜென்ட்கள் ஆகியோர் சுமார் 12 மணி நேரம் வாக்கு எண்ணும் மையங்களில் இருக்க வேண்டியிருப்பதால் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவேண்டும். குறிப்பாக தண்ணீர், கழிவறை வசதிகளை கூடுதலாக செய்து தரவேண்டும். கண்டிப்பாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு ஆம்புலன்ஸை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.