எட்டயபுரம்: எட்டயபுரம் ஆட்டுசந்தையில் இரண்டாவது வாரமாக சமூக இடைவெளியில்லாமல் வியாபாரிகள் கூடியதால் கொரோனா தடுப்பு கேள்விகுறியானது. கொரோனா இரண்டாவது அலை வீரியமாக உள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. மற்ற தினங்களில் சமூக இடைவெளி, முககவசம் என பலவழிகளிலும் கொரோனாவை தடுக்க அரசு முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் எட்டயபுரம் ஆட்டுசந்தையில் கடந்த வாரமும் சமூக இடைவெளியில்லாமல் ஒருவருக்கொருவர் நெருக்கியடித்தபடி வியாபாரத்தில் ஈடுபட்டனர். வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்டுகொள்ளாத நிலையில் இந்தவாரமும் சந்தை கூடியது. வழக்கம் போல் நூற்றுக்கணக்கான வியாபாரிகளும் விவசாயிகளும் கூடினர். நெல்லை, மேலப்பாளையம் சந்தை கடந்தவாரமே மூடப்பட்ட நிலையில் எட்டயபுரம் சந்தை தொடர்ந்து செயல்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.