சென்னை: வனப்பகுதி அல்லாத இடங்களில் உள்ள மரங்களை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கள் என்ன? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. உணவு மற்றும் சுவாசத்திற்கான காற்று என எண்ணிலடங்கா பல நன்மைகளையும் நமக்கு மரங்கள் தருகிறது. இந்த நிலையில் காடுகளை அழித்தல், மரங்களை வெட்டுதல் என்பது தொடர்கதையாக உள்ளது.
இதனால் மரங்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாகக் குறைந்து வருகிறது. அதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்புகள் நிகழக்கூடும் என்பதால், காடுகள் அழிப்பைத் தடுக்கவும், மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அரசு மற்றும் அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.
இந்தநிலையில் மரங்களை பாதுகாக்க நிபுணர் குழு அமைக்க கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் கர்நாடகா, டெல்லி, உ.பி, போன்ற மாநிலங்களில் மரங்களை பாதுகாக்க சட்டங்கள் உள்ளதாக மனுதாரர் தெரிவித்தார். அதனையடுத்து இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உள்த்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை, பொதுப்பணித்துறை, டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.