திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி படுக்கையிலேயே மரணம்!: உடலை அகற்றாததால் சக நோயாளிகள் அச்சம்..!!

2021-05-01@ 15:29:00

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர் உடலை உடனடியாக அகற்றாததால் மற்ற நோயாளிகள் பதற்றமடைந்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது. இதில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவர் படுக்கையிலேயே உயிரிழந்துவிட்டார். 


அவரது உடலை உடனடியாக அகற்றாததால் மற்ற நோயாளிகளின் உறவினர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, உயிரிழந்தவர் உடலை வார்டில் இருந்து 4 மணி நேரத்திற்கு பிறகு அப்புறப்படுத்தி உள்ளனர். திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று ஒரேநாளில் கொரோனா நோயாளிகள் 7 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.