மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதி!: முதல் தவணையாக ரூ.8,873 கோடி மாநிலங்களுக்கு விடுவிப்பு..!!

2021-05-01@ 12:57:42

டெல்லி: மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதி முதல் தவணையாக 8,873 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த தொகை ஜூலை மாதத்தில் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால் கொரோனா தொற்று பரவல் நெருக்கடி காலத்தை கருத்தில் கொண்டு பேரிடர் நிவாரண நிதி முதல் தவணையை விடுவிக்கும் படி, மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டதை அடுத்து, உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து முதல் தவணை நிதியை வழங்கியுள்ளது. இந்த நிதியின் 50 சதவீத தொகையை கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள்  பயன்படுத்தலாம். 


கடந்த நிதி ஆண்டில் இந்த நிதி பயன்படுத்தியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே, பேரிடர் நிவாரண நிதிக்கான அடுத்த தவணை வழங்கப்படும். ஆனால் இம்முறை அதற்காக காத்திருக்காமல் உடனடியாக முதல் தவணை விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த, மருந்துகள் வாங்க, ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்க, மருத்துவமனை சுற்றுச்சூழலை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் பேரிடர் நிவாரண நிதியின் முதல் தவணை தொகையை பயன்படுத்திக்கொள்ள முடியும்.