வீட்டை விட்டு வெளியே வராதீங்க!: கொரோனா 2வது அலையில் கர்ப்பிணிகள் அதிகம் பாதிப்பு.. மகப்பேறு நிபுணர்கள் தகவல்..!!

2021-05-01@ 17:23:33

சென்னை: கொரோனா 2ம் அலையில் முதல் முறையை விட கர்ப்பிணிகள் அதிகம் பாதிக்கப்படுவதாக தாய், சேய் மகப்பேறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா 2ம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த முறை அனைத்து தரப்பினரையும் தொற்று பாதிப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக முதல் அலையில் அவ்வளவாக பாதிக்கப்படாத கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த முறை அதிகம் பாதிக்கப்படுவதாக தாய், சேய் மகப்பேறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  


இது குறித்து சென்னை எழும்பூர் தாய், சேய் மகப்பேறு  மருத்துவமனையின் மருத்துவர் விஜயா கூறுகையில், தற்போது அரசு மகப்பேறு மருத்துவமனையில் 44 பெண்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு பிறந்த 14 குழந்தைகளில் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 


மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள் மூச்சிவிடவும் சிரமப்படுவதாக தெரிவித்த அவர், அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகம் ஏற்படுவதாகவும் கூறினார். இதுவரையில் கிட்டத்தட்ட 7 ஆயிரம் குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறும் நிபுணர்கள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.