சாயல்குடி: முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல், கீழகன்னிச்சேரி, விளங்குளத்தூர், வெங்கலகுறிச்சி போன்ற கிராமங்களில் அறுவடை செய்த வயற்காட்டில் இயற்கை பசுந்தாழ் உரமான தட்டைபூண்டு செடியை வளர்ப்பதில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கீழக்கன்னிச்சேரி விவசாயிகள் கூறுகையில், ‘‘40 நாட்களில் பூக்கும் தட்டைப்பூண்டு செடி இயற்கையில் பசுந்தாழ் உரமாக கிடைக்கிறது. நெருக்கமாக வளர்க்கப்படும் இச்செடியை பாதி எடுத்து பிற வயல்களிலும் பயன்படுத்தப்படுகிறது. தட்டைபூண்டு, ஆடு, மாடு சாணம் போட்டு இதன்மேல் உழுவதால் மழை காலத்தில் மழை நீர் வீணாகாமல் விவசாய நிலத்தில் சேமிக்கப்படுகிறது.
மண்ணின் தன்மை மாறி காற்றோட்டம் ஏற்படும். நுண்ணுயிர்களின் வளர்ச்சி அதிகரிக்கும். மண்ணில் புதைந்து கிடக்கும் பூச்சி முட்டை அழிக்கப்படும். களை செடிகளின் விதைகளும் அழிக்கப்படும். நெல், மிளகாய் போன்ற பயிர்களுக்கு தேவையான இயற்கையான தாழைச்சத்து, நைட்ரஜன், அங்ககசத்து போன்றவை கிடைக்கிறது. இதனால் வருகின்ற பருவ கால விவசாயத்திற்கு நன்மைகள் ஏற்படும். தட்டை பூண்டு செடிகளை வளர்த்து அதனை கறவை மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு வழங்கி வருவதால் இயற்கை தீவனமாக கிடைக்கிறது.
செலவும் குறைகிறது. இதனைபோன்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் விவசாய நிலங்களில் தட்டைபூண்டு செடியை பயிரிட வேளாண் துறை அதிகாரிகள் ஊக்கப்படுத்த வேண்டும்’’ என வலியுறுத்தினர்.