மீன், இறைச்சி கடைகள் 2 நாள் மூடல்: மார்க்கெட்டுகளில் அதிகாலையே அலைமோதிய மக்கள்: மீன்கள் 3 மடங்கு விலை உயர்வு

2021-05-01@ 12:50:54

திருச்சி : இன்று முதல் 2 நாள் மீன், இறைச்சி கடைகளை மூட அரசு உத்தரவிட்டு இருந்ததால் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் நேற்று அதிகாலையே அலைமோதியது. வரத்து குறைவால் மீன்கள் 3 மடங்கு விலை உயர்ந்தது. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஏப்ரல் 30ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 20ந்தேதி முதல் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முழுஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் கூட்டம் அலை மோதியதால் நோய் பரவல் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, சனிக்கிழமைகளிலும் இறைச்சி கடைகள் மற்றும் மீன்மார்க்கெட்களை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படுவதுடன், கடையின் உரிமையாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் இரண்டு நாட்கள் இறைச்சி, மீன்கடைகள் மூடப்படுவதால் திருச்சி உள்பட டெல்டா மாவட்டத்தில் உள்ள மீன்மார்க்கெட்டுகள், இறைச்சி கடைகளில் வெள்ளிக்கிழமையான நேற்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் சிக்கன், மட்டன் கடைகளிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால் மீன்கள் விலை பல மடங்கு உயர்ந்தது. திருச்சியில் உறையூர் லிங்கநகரில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகை, மங்களூர், கோவா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து 300 டன் மீன்கள் விற்பனைக்கு வந்தது. மீன்கள் வாங்க வழக்கத்தை விட நேற்று அதிகாலையே மக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் கூட்டம் குவிந்தது. இதனால் 1 கோடி வரை மீன்வர்த்தகம் நடந்தது. இரண்டு நாட்கள் மீன் கடை இயங்காது என்பதால் நேற்று இரவு 7 மணி வரை மீன் கடை நடை பெற்றது. மீன்கள் வரத்து குறைவாக இருந்ததால் மீன்களின் பல மடங்கு உயர்ந்தது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘இன்று (நேற்று) 30 வண்டி மீன்கள் வந்தது. ஒரு வண்டியில் தலா 35 கிலோ கொண்ட 300 பெட்டிகள் இருந்தது. மீன்கள் விலை பல மடங்கு உயர்ந்தது. கிலோ 150க்கு விற்ற சங்கரா மீன் 250க்கும், ₹200க்கு விற்ற விளமீன் 300, வஞ்சிரம் 700, பாறை 300, ஊளி 300, மத்தி 80, கட்லா 140, நண்டு 250, இறால் வகையை பொறுத்து 320 முதல் 400 வரையும், சின்ன இறால் 320க்கும் என 3 மடங்கு உயர்த்தி விற்பனை ஆனது. இது மகிழ்ச்சி அளித்தாலும், வரத்து குறைவால் கவலை அளிப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

திருச்சி காந்திமார்க்கெட் அருகே உள்ள மீன் மார்க்கெட்டிலும் கூட்டம் குவிந்தது. கோழி, ஆடு போன்ற இறைச்சி கடைகளிலும் கூட்டம் அலைமோதியதால் கிலோ 650க்கு விற்ற மட்டன் 800வரை விற்கப்பட்டது. கோழிக்கறி 160 முதல் 180 வரை உயர்த்தி விற்கப்பட்டது. இதேபோல் திருவாரூர், தஞ்சை, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்பட மாவட்டம் முழுவதும் மீன்மார்க்கெட்டுகள்,இறைச்சி கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் மக்கள் பலர் மாஸ்க் போடாமலும், சமூக இடைவெளியில்லாமலும் கூட்டமாக வந்து மீன்கள் வாங்கி சென்றனர்.

மீன்களுக்கு தட்டுப்பாடு
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், கட்டுமாவடி போன்ற பகுதிகளில் உள்ள ஏலக்கடைகள் வெறிச்சோடி கிடந்தன. கிராமபுறங்களில் உள்ள மீன் மார்கெட்டுகளுக்கு குறைந்த அளவு மீன் விற்பனைக்கு வருவதால் 1 கிலோ 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட காளை மீன் 700 முதல் 800 ரூபாய் வரை விற்கிறது. 1 கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட வாவல் மீன் 800 ரூபாய் வரை விற்கிறது. 1 கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட பொடி மீன் 450 ரூபாய் வரை விற்கிறது. 1 கிலோ 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட இரால் 650 முதல் 700 ரூபாய் வரை விற்கிறது 300 ரூபாய் விற்கப்பட்ட நண்டு 600 ரூபாய்க்கு விற்கிறது. மீன் இருமடங்கு உயர்ந்தாலும் மார்கெட்டுகளுக்கு மீன் வரத்து குறைவாக உள்ளதால் பொதுமக்களுக்கு உணவிற்கே மீன் மிகவும் தட்டுப்பாடாக உள்ளது.