தொடர் விடுமுறை எதிரொலி; ஒரே நாளில் ரூ.292.09 கோடிக்கு மது விற்பனை அமோகம்... முதல் இடத்தில் சென்னை

2021-05-01@ 10:27:23

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.292.09 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.63 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை காரணமாக கொரோனா தொற்றின் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. இதனால், தமிழக அரசு இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவற்றை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு மார்ச் 25ஆம் தேதி சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. எனினும், கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதன்படி தற்போது, இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று முழு ஊரடங்கை தொடர்ந்து, நேற்று தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் ரூ.56 கோடிக்கும், சேலத்தில் ரூ.56 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மதுரையில் ரூ.59 கோடிக்கும், கோவையில் ரூ.56 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள் விடுமுறை என்பதால் நேற்று மது விற்பனை அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று இறைச்சி கடைகள் திறக்க அனுமதி இல்லை எனவும் கூறியிருந்தது. அனைத்து மது கடைகளிலும் மது வாங்க வாடிக்கையாளர்கள் அலைமோதியதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் இன்று ஒரு நாளில் மட்டும் 4 லட்சம் பேருக்கு மேலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.