புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் 27வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை முதல் போட்டியில் டெல்லியிடம் தோற்ற நிலையில் அடுத்த 5 போட்டிகளில் வென்று டாப்பில் உள்ளது. டூபிளெசிஸ் சூப்பர் பார்மில் உள்ளார். ருதுராஜ் கெய்ட்வாட், ரெய்னா,மொயின் அலி வலு சேர்க்கின்றனர். ஜடேஜா பேட்டிங்,பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் அசத்தி வருகிறார். இதனால் வெற்றியை தொடரும் முனைப்பில் இன்று களம் காண்கிறது.
மறுபுறம் மும்பை 6 போட்டியில் 3ல் வெற்றி,3ல் தோல்வி கண்டுள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ரோகித்சர்மா , டிகாக் , சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட் என அதிரடி வீரர்கள் உள்ளனர். ஹர்த்திக் பாண்டியா ஆட்டம் இதுவரை பெரிதாக இல்லை. பந்துவீச்சில் பும்ரா சிக்கனமாக வீசி வருகிறார். கடந்த போட்டியில் ராஜஸ்தானை எளிதாக வீழ்த்திய நிலையில் வெற்றியை தக்க வைக்கும் எண்ணத்தில் களம் இறங்குகிறது. இரு அணிகளும் இதுவரை 30 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் சென்னை 12, மும்பை 18 போட்டிகளில் வென்றுள்ளன. கடைசியாக மோதிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே சென்னை வென்றுள்ளது.