ஜப்பான் நாட்டை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு..!!

2021-05-01@ 10:14:32

டோக்கியோ: ஜப்பானில் இன்று காலை சக்திமிக்க நிலநடுக்கம் ஒன்று உலுக்கியது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. ஜப்பானில் ஹோன்சோ நகரில் கிழக்கு கடற்கரையோர பகுதியை காலை 6:57 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஒன்று தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் இது 6.8 ஆக பதிவாகி இருப்பதாக யூ.எஸ்.ஜி.எஸ். எனப்படும் அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. 


இதனை ஜப்பான் புவியியல் ஆய்வியல் மையமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. ஜப்பான் அருகே பசுபிக் கடல் பகுதியில் 47 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் டோக்கியோ மற்றும் ஜப்பானில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


நிலநடுக்கம் 6.8 ஆக பதிவாகி உள்ள போதும் சுனாமி பேரலை எழுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. இருப்பினும் கடலில் ஏற்படும் மாற்றங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. நிலநடுக்கத்தால் ஜப்பானில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.