தேர்தல் முடிவு வெளியானதும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என எதிர்பார்ப்பு..!!

2021-05-01@ 10:45:49

சென்னை: தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 67 டாலர்கள் என்ற நிலையில் உள்ள போதும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையை ஏற்றாமல் வந்தன. இந்த நிலை மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி டீசல் மற்றும் பெட்ரோல் விலை 2 முதல் 3 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. 


உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி ஆகியவை முக்கிய காரணியாக விளங்குகிறது. வரியை குறைக்க பல்வேறு தரப்பில் இருந்து பலமுறை கோரிக்கை எழுந்த போதும் கொரோனா 2ம் அலையின் காரணமாக பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழலில் மாற்றம் சாத்தியம் இல்லை என்றும் கூறப்பட்டது. 


உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் விலை உயர்த்தும் முடிவை எண்ணெய் நிறுவனங்கள் கைவிடாது என்று கூறப்படும் நிலையில், விலை உயர்வு மே மாதம் முதல் வாரத்தில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களிலும் கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலத்தில் விலையை உயர்த்தாமல் தேர்தல் முடிவுகள் வெளியானதும் மீண்டும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.